Offline
Menu
சுங்கை பூலோ பள்ளிவாசல் உண்டியலில் தொடர்ந்து திருட்டு
By Administrator
Published on 07/27/2026 19:00
News

கம்பியால் ‘தூண்டில்’ போட்ட நபர் சிசிடிவி உதவியுடன் கையும் களவுமாகப் பிடிபட்டார்!

பண்டார் பாரு சுங்கை பூலோ பள்ளிவாசலில் (MBBSB) வைக்கப்பட்டிருந்த நன்கொடை உண்டியல்களில் இருந்து தொடர்ந்து பணத்தைத் திருடி வந்த நபர் ஒருவர், சிசிடிவி கண்காணிப்பு மற்றும் காவல்துறையின் அதிவேக நடவடிக்கையால் நேற்று அதிகாலை கையும் களவுமாகப் பிடிபட்டார்.

நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 3 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் பள்ளிவாசல் மண்டபப் பகுதிக்குச் சுலபமாக நுழையும் அந்த நபர், மெல்லிய கம்பிகளைப் பயன்படுத்தி உண்டியலுக்குள் இருக்கும் பணத்தைத் ‘தூண்டில்’ போட்டு எடுத்துள்ளார்.

முன்னதாக, உண்டியலை உடைத்துச் சேதப்படுத்திப் பணத்தைத் திருடிச் சென்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த ஒரே பள்ளிவாசலில் மட்டும் அவர் 3 முறை திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

அப்பகுதியில் உள்ள பல பள்ளிவாசல்களில் தொடர்ந்து இது போன்ற திருட்டுகள் நடந்து வந்ததால், பள்ளிவாசல் நிர்வாகமும் சுங்கை பூலோ காவல் நிலைய அதிகாரிகளும் இணைந்து சிசிடிவி கேமராக்கள் மூலம் அந்நபரின் நடமாட்டத்தைக் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

நேற்று அதிகாலை அந்த நபர் மீண்டும் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சந்தேகத்திற்கிடமாக உலாவுவதைச் சிசிடிவி வழியே கவனித்த மேலாளர், உடனடியாகக் காவல் நிலையப் பொறுப்பதிகாரியைத் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்த 2 முதல் 3 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த நபரைச் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.

கைதான நபரிடம் தற்போது சுங்கை பூலோ போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments