Offline
Menu
டெசாருவில் சிங்கப்பூர் பதிவெண் கொண்ட 3 கார்கள் உடைப்பு
By Administrator
Published on 09/10/2026 12:00
News

டெசாரு கோஸ்ட் அட்வெஞ்சர் நீர்விளையாட்டுப் பூங்காவின் வாகன நிறுத்துமிடத்தில் சிங்கப்பூர் பதிவெண் கொண்ட மூன்று கார்கள் உடைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி பட்டப்பகலில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவத்தில், இரண்டு கார்களின் பின்பக்கப் பயணியர் சாளரங்களும் மற்றொரு காரின் பின்புறக் கண்ணாடியும் உடைக்கப்பட்டிருந்தன. பாதிக்கப்பட்ட வாகனங்களில் மெர்சிடிஸ், ஹோண்டா பல்நோக்கு வாகனம், டிரைப்கார் நிறுவனத்தின் வாடகைக் கார் ஆகியவை அடங்கும்.

கார்களில் வைக்கப்பட்டிருந்த பைகள் உள்ளிட்ட பொருள்களைக் குறிவைத்து இச்செயல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனச் சம்பவ இடத்திற்கு அருகில் காரை நிறுத்தியிருந்த சியாபிக் மசெலான் என்பவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

ஒரு காரிலிருந்து இரண்டு ஐபேட்கள், ஏர்போட்ஸ் சாதனம் ஆகியவை காணாமல் போனதாகவும், மற்றொரு காரிலிருந்து குழந்தைக்குரிய பொருள்கள் வைக்கப்பட்டிருந்த பை எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மெர்சிடிஸ் கார் உரிமையாளர் காவல் துறையில் புகார் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக டெசாரு கோஸ்ட் அட்வெஞ்சர் நீர்விளையாட்டுப் பூங்கா உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் ஊடகத் தொடர்பு அதிகாரி கிரேஸ் சியாம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

பார்வையாளர்களின் பாதுகாப்புக்கே நிர்வாகம் முதன்மை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற சம்பவங்கள் அரிதாகவே நிகழ்ந்தாலும் பாதுகாப்புக் குழுவுடனும் உள்ளூர் அமலாக்கத் தரப்பினருடனும் நிர்வாகம் நெருக்கமாக ஒத்துழைத்து வருவதாகக் கூறினார்.

பார்வையாளர்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் வாகன நிறுத்துமிடங்களிலும் பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையும் சுற்றுக்காவல் நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில் வாகன நிறுத்துமிடங்களைச் சோதனையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விரைந்து செயல்படுவதற்கு வசதியாக அமலாக்கத் தரப்பினருடனான ஒருங்கிணைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பார்வையாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நினைவூட்டும் பாதுகாப்பு அறிவிப்புப் பலகைகளும் முக்கிய இடங்களில் நிறுவப்படவுள்ளன.

Comments