வாகனங்களின் உரிமை மாற்ற நடவடிக்கைகளில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) அதிகாரிகள் 6 பேர் உட்பட 11 பேரைப் பேராக் மாநில ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட 7 ஆண்களும் 4 பெண்களும் அடங்குவர். இவர்களை வரும் திங்கட்கிழமை வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
நேற்று இரவு 10 மணியளவில் பேராக் மாநில SPRM அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானபோதே இவர்கள் அனைவரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் 6 JPJ அதிகாரிகளுடன், 4 வாகன முகவர்களும் அடங்குவர்.
மொத்தம் 16 வாகனப் பதிவு எண்கள் தொடர்பான உரிமை மாற்ற நடவடிக்கைகளின் போது, போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து முறைகேடு செய்வதற்காக இந்த அரசு ஊழியர்களும் முகவர்களும் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய பேராக் மாநில எஸ்பிஆர்எம் இயக்குநர் அஸிஸுல் அஹ்மாட் சர்காவி, இச்சம்பவம் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009, பிரிவு 18-இன் கீழ் (போலி ஆவணங்கள் சமர்ப்பித்தல்) தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.