Offline
Menu
விபத்தின் அதிர்ச்சியில் தந்தைக்கு மாரடைப்பு-மகள் பலி
By Administrator
Published on 09/11/2026 13:00
News

தெமர்லோவிலுள்ள ஜாலான் தெமர்லோ-மெந்தக்காப் சாலையில் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 9 வயது சிறுமி, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடுப்பில் மோதியதால் எதிர்திசைச் சாலையில் தூக்கி வீசப்பட்டு, மற்றொரு வாகனம் மோதிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று மதியம் 2 மணியளவில் நிகழ்ந்த இக்கோர விபத்தில், நூருல் யூனா அக்கிலா என்ற 9 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை தெமர்லோ மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமது நசீம் பஹரோன் உறுதிப்படுத்தினார்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 55 வயதான தந்தை சஃப்ரியான்டி இஸ்மாயில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.இருப்பினும், கண்ணெதிரே மகள் உயிரிழந்த அதிர்ச்சியில் அவருக்குத் திடீரெனக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காகச் சுல்தான் ஹாஜி அகமத் ஷா (HOSHAS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விசாரணையில், அச்சிறுமியின் தந்தை செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் (Driving License) இன்றியே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது தெரியவந்தது.இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் மற்றும் சாலைப் போக்குவரத்துச் சட்டப் பிரிவு 41(1)-இன் கீழ் (அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல்) காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments