Offline
Menu
கோத்தா பாருவிலுள்ள இரட்டை மாடி வீட்டில் தீ சம்பவம்
By Administrator
Published on 09/12/2026 15:00
News

கோத்தா பாருவிலுள்ள ஜாலான் பந்தாய் சகாயா புலான் அருகே பாசார் கோக் காப்போர் பகுதியில் அமைந்துள்ள இரு மாடி வீடு ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட கொடூரத் தீ சம்பவத்தில், 66 வயதுடைய முதியவர் ஒருவர் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

நேற்றிரவு 8.43 மணியளவில் இத்தீ விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதாகக் கோத்தா பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கைத் தளபதி முகமது ரிட்சுவான் பஹாருடின் தெரிவித்தார்.

 

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீ தீவிரமாகப் பரவி 95 சதவீதம் வரை எரிந்து சேதமடைந்த வீட்டின் குளியலறையிலிருந்து காங் சூ ஹாக் என்ற முதியவரின் உடலை இரவு 9.37 மணியளவில் மீட்டனர்.

 

இத்தீயணைப்பு நடவடிக்கையில் கோத்தா பாரு, கோத்தா தாருல் நயீம் மற்றும் பெங்காலான் செப்பா ஆகிய நிலையங்களைச் சேர்ந்த 35 தீயணைப்பு வீரர்கள், 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு நீர் தாங்கி வாகனம் (Water Tanker) ஆகியவற்றுடன் ஈடுபட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இச்சம்பவம் ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் குறித்துத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Comments