புக்கிட் மெர்தாஜாத்திலுள்ள கட்டுமான தளம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாரக்கட்டு தாங்கு தளம் திடீரென சரிந்து விழுந்ததில், அங்குப் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் கொடூரமாக உயிரிழந்தார்.
கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி மாலை சுமார் 6.15 மணியளவில் நிகழ்ந்த இக்கொடூர விபத்து குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகப் பினாங்கு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை (DOSH) உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த கட்டிடத்தின் 8-ஆவது மாடியில் அமைக்கப்பட்டிருந்த சாரக்கட்டைப் பிரிக்கும் பணியில் அந்தத் தொழிலாளி ஈடுபட்டிருந்தபோது, அதைத் தாங்கிப் பிடித்திருந்த தற்காலிகப் பாதுகாப்புத் தளம் திடீரெனச் சரிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சாரக்கட்டுடன் சேர்ந்து கீழே விழுந்த அந்தத் தொழிலாளிக்குத் தலையில் மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவக் குழுவினர் உறுதி செய்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மேல் விசாரணை முடியும் வரை விபத்து நடந்த இடத்தில் எந்த செயற்பாடும் செய்யக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்கவும் பினாங்கு DOSH உத்தரவிட்டுள்ளது.
தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் 1994-இன் பிரிவுகள் 17, 18A மற்றும் 18B ஆகியவற்றின் கீழ் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.உயரமான இடங்கள் மற்றும் சாரக்கட்டுகளில் வேலை செய்யும்போது தேவையான அபாயக் மதிப்பீடுகள் (Risk Assessments) மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை முதலாளிகள் உறுதிப்படுத்த வேண்டும் என DOSH கடுமையாக எச்சரித்துள்ளது.