Offline
Menu
காணாமல் போன பயணிகள் கப்பலில் மலேசியர்கள் யாரேனும் உள்ளனரா என விஸ்மா புத்ரா ஆய்வு
By Administrator
Published on 09/14/2026 13:00
News

இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ என்ற பயணிகள் கப்பலில் மலேசியர்கள் யாரேனும் பயணம் செய்தனரா என்பது குறித்து மலேசிய வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா) ஆய்வு செய்து வருகிறது. கப்பலின் பயணிகள் விவரப் பட்டியலைப் பெறவும், சம்பவம் குறித்த விவரங்களை உறுதிப்படுத்தவும் இந்தோனேசிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இந்த ஆரம்பகட்ட நிலையில், இச்சம்பவத்தில் மலேசியர்கள் எவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக எந்தத் தகவலும் அமைச்சகத்திற்குக் கிடைக்கவில்லை என்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 13 வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தேடுதல், மீட்புப் பிரிவின் தகவலின்படி, இக்கப்பலில் இருந்த 103 பேர் மீட்கப்பட்டுள்ளனர் (அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்); மீதமுள்ள 140 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

மொத்தம் 243 பேருடன் சென்ற இக்கப்பல், மோசமான வானிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தொடர்பை இழந்ததைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. இக்கப்பல் கிழக்கு ஜாவாவின் சுரபாயாவிலிருந்து தெற்கு கலிமந்தானின் பன்ஜார்மாசின் நகருக்குச் செல்ல சனிக்கிழமையன்று புறப்பட்டிருந்தது.

 

கப்பல் கடைசியாக இருந்ததாக அறியப்பட்ட இடத்தில் தேடுதல் பணிகளை மேற்கொள்ள கப்பல்கள், ஹெலிகாப்டர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீட்புக் குழுவினர்,  கப்பலுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. இந்தோனேசியாவில் வசிக்கும் அல்லது அங்கு பயணம் செய்யும் மலேசியர்கள், உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

மேலும், தகவல் தொடர்பு மற்றும் தேவைப்படும்போது தூதரக உதவிகளைப் பெறுவதை எளிதாக்கும் வகையில், - கவுன்சில்ர் இணையதளம் மூலம் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து, அவற்றை அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ளுமாறும் மலேசியர்களை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. தூதரக உதவி தேவைப்படுபவர்கள் அல்லது இது தொடர்பான தகவல் வைத்திருப்பவர்கள், ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகத்தை +62 21 522 4947 / +62 813 8081 3036 ஆகிய எண்கள் மூலமாகவோ அல்லது mwjakarta@kln.gov.my என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Comments