நெகிரி செம்பிலான், கம்போங் காடோங் பகுதியில் இன்று பிற்பகல் உணர்ந்த நில அதிர்வானது, தனது 57 ஆண்டுகால வாழ்க்கையில் இதுவரை அனுபவித்திராத ஒரு புதிய அனுபவம் என அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் 4.59 மணியளவில் வீட்டின் வரவேற்பறையில் படுத்துக்கொண்டிருந்தபோது, திடீரெனத் தன்னைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிர்வதை உணர்ந்ததாக 57 வயதான கைனிஸா முகமட் கூறினார்.
இந்த நில அதிர்வு சுமார் 2 முதல் 3 வினாடிகள் மட்டுமே நீடித்தபோதிலும், அது தனக்கு பெரும் அதிர்ச்சியையும் லேசான பயத்தையும் ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
உடனடியாக எனது மகனிடம் அவனும் அதை உணர்ந்தானா என்று கேட்டேன். பின்னர் எனது குடும்பத்தினர் மற்றும் கிராமச் சங்கத்தின் வாட்ஸ்அப் குழுக்களில் செய்தி அனுப்பி கேட்டபோது, அவர்களும் அந்த நில அதிர்வை உணர்ந்ததாகக் கூறினர்.” என்று அவர் சொன்னார்.
அவரது சகோதரி வீட்டின் முற்றத்தில் இருந்த அலங்காரச் செடிகள் அசைந்ததைக் கண்டு நில அதிர்வை உறுதிப்படுத்தியதாக கைனிஸா மேலும் தெரிவித்தார்.
இன்று பிற்பகல் 4.55 மணியளவில் ஜோகூர், பத்து பஹாட் கடற்பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவான லேசான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலானின் தம்பின், ரம்பாவ் மற்றும் ஜெம்போல் ஆகிய பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.