கோலாலம்பூர்,மலேசியா முழுவதும் உள்ள 528 தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான தகவல்கள், தரவுகள், பள்ளி சார்ந்த அண்மைய செய்திகளை ஒரே தளத்தில் இணைக்கும் “SJKT CONNECT” ஓரிய இலக்கவியல் தரவுத்தளம் இன்று கோலாலம்பூர் தம்புசாமிப் பிள்ளை தமிழ்ப்பள்ளியில் அதிகாரப்படியாக அறிமுகம் கண்டது.
மலேசியத் தமிழ் அறவாரியமும் இந்திய அரசுசாரா அமைப்புகளின் கூட்டமைப்பு (ACE)-சும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி, மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கழகம், மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம், தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியங்களின் கூட்டமைப்பு மற்றும் மலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் தேசிய சங்கம் ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெற்றது.
மலேசியாவின் 11 மாநிலங்களிலும் 122 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அமைந்துள்ள 528 தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான தரவுகளையும் தகவல்களையும் ஒரே இடத்தில் தொகுத்து, பள்ளிகள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், சமூக அமைப்புகள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பயன்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த தகவல் தளம் இதுவரை இல்லாதிருந்த இடைவெளியை நிரப்பும் நோக்கில் SJKT CONNECT உருவாக்கப்பட்டுள்ளது.
உருவாக்கச் செயற்கை நுண்ணறிவு (Generative AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இத்தளம், வெறும் தகவல் சேகரிப்புத் தளமாக இல்லாமல், தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான ஆக அண்மைய மேம்பாடுகளையும் சவால்களையும் தொடர்ந்து கண்காணித்து, அவற்றைத் தரவுகளுடன் இணைத்து, சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் சமூக ஓரிய தரவுத் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.