ஜாலான் சிலிபினில் அமைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்புச் சோதனையின் போது, தப்பிச் செல்ல முயன்று போக்குவரத்துப் போலீஸ்காரர் மீது காரை மோதிப் படுகாயப்படுத்திய 29 வயது கார் கழுவும் பணியாளருக்குப் பொலிஸ் தடுப்புக் காவல் விதித்து ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் லாவ் ஏரிக் பிறப்பித்த உத்தரவின்படி, சந்தேகநபரான அந்த ஆடவர் வரும் புதன்கிழமை வரை 5 நாட்களுக்குக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படவுள்ளார்.
“சம்பவத்தில் படுகாயமடைந்த லான்ஸ் கோப்ரல் முஹமட் பாட்ருல் இஸ்வானி பௌஸி, ஈப்போ சன்வே மருத்துவ மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். இடது கை மற்றும் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள அவருக்குச் சுமார் 7 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது மயக்க நிலையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட சந்தேகநநபரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் (Driving License) இல்லை என்பதும், அவர் ஓட்டி வந்த வாகனத்தின் சாலை வரி (Road Tax) காலாவதியாகியிருந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், அவரது சிறுநீர் மாதிரியைப் பரிசோதித்ததில் அவர் ‘மெத்தாம்பெட்டமைன்’ போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.