Offline
Menu
பங்சாரில் 139 கிலோ கஞ்சா கடத்தல்
By Administrator
Published on 10/01/2026 15:00
News

இரு பார்சல் விநியோகஸ்தர்களுக்கு 30 ஆண்டுகள் சிறை மற்றும் 12 பிரம்படிகள் தண்டனை!

 

கடந்த 2022-ஆம் ஆண்டு பங்சார் பகுதியில் 139 கிலோகிராம் கஞ்சாவைக் கடத்திய குற்றத்துக்காக, பார்சல் விநியோகஸ்தர்களாகப் பணியாற்றி வந்த இருவருக்கு மலேசிய உயர் நீதிமன்றம் தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

 

38 வயதான எஸ். மோகன் மற்றும் 28 வயதான அகமத் ஷாமில் அப்துல் ரஷீத் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபித்துள்ளதாக நீதிபதி டத்தோ முகமட் ஆரிஃப் எம்ரான் ஆரிஃபின் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

 

“அனைத்துச் சாட்சியங்கள் மற்றும் இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த பிறகு, குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான சிறைத்தண்டனை கைது செய்யப்பட்ட மே 31, 2022 முதல் கணக்கிடப்படும்” என்று, மலேசிய உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் ஆரிஃப் எம்ரான் ஆரிஃபின் கூறினார்.

 

கடந்த 2022 மே 31-ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில், பங்சாரில் உள்ள ஒரு வணிக வளாகக் கார் நிறுத்தத்தில் வைத்து 139,019.3 கிராம் கஞ்சாவைக் கடத்தியதாக மோகன் மற்றும் அகமட் ஷாமில் மீது 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B(1)(a)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

சிலாங்கூர் மாநிலக் காவல் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, புரோட்டான் பிரீவ் மற்றும் டொயோட்டா வெல்ஃபையர் ஆகிய இரு கார்களுக்கு இடையே நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மூட்டைகளை இவர்கள் கைமாற்றுவதைக் கண்டறிந்தனர்.அப்போது காவல் துறையினர் அவர்களைக் கைது செய்ய முயன்றபோது, அகமட் ஷாமில் காரை ஓட்டித் தப்பியோட முயன்றார். இருப்பினும், ஜாலான் தெலாவி 1 பகுதியில் தீவிர விரட்டலுக்குப் பிறகு அவர் காவல் துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

 

நீதிமன்றத்தில் மோகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முஹம்மது யாசர் அசாத் ஜைனுடின் மற்றும் அகமட் ஷாமில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முஹமட் ஃபாயிஸ் ஃபாட்சில் ஆகியோர், தங்கள் கட்சிக்காரர்கள் தங்களது தவறை உணர்ந்து திருந்த வாய்ப்பளிக்குமாறு முறையிட்டனர். எனினும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இக்கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.

Comments