சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தின் 36 ஆண்டு கால பயணம் நிறைவடைவதாகவும், அது இடிக்கப்பட உள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல் அவரது லட்சக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ‘லவ்’ வெப் சீரிஸ் செய்திச்சந்திப்பின் போது, ராகவேந்திரா மண்டபத்தின் காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் தேவை என்பதால் அடுத்தகட்ட கட்டுமானப் பணிகள் குறித்து பேசி வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 1990-களில் கட்டப்பட்ட இந்த திருமண மண்டபம், வெறும் சிமெண்ட் கட்டடமாக இல்லாமல் ரஜினிகாந்தின் அரசியல் மற்றும் சினிமா பயணத்தின் மிக முக்கிய வரலாற்றுச் சாட்சியாகத் திகழ்ந்தது. ‘வீரா’ படத்தில் வரும் புகழ்பெற்ற பாடல் படமாக்கப்பட்டது முதல், “சிஸ்டம் சரியில்லை” என்று கூறி ரஜினி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்ட தருணம் வரை, இந்த மண்டபம் ரசிகர்களின் உணர்வுகலில் கலந்திருந்தது.
சென்னைக்கே ஒரு அடையாளமாகத் திகழ்ந்த ராகவேந்திரா திருமண மண்டபம் ரசிகர்களை நேரில் அழைத்து வயிற்றுக்கும் மனதுக்கும் அன்போடு விருந்தளித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்ட நினைவுகள், 2015 பெருவெள்ளத்தின் போது தூய்மைப் பணியாளர்களுக்கு அடைக்கலம் தந்த கருணை உள்ளம் என இந்த மண்டபத்துடன் இணைந்த பல நெகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்கள் கண்ணீருடன் நினைவுகூர்கிறார்கள்.