லங்காவியில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட இரண்டு நாள் அதிரடிச் சோதனையில், போலியாகத் தயாரிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையத்தின் (UNHCR) அட்டைகள் மற்றும் தற்காலிக வேலை அனுமதி ஆவணங்களைப் பயன்படுத்தியதாக 43 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் தீவின் 17 முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது மொத்தம் 95 நபர்களின் ஆவணங்கள் தீவிரமாகச் பரிசோதிக்கப்பட்டதாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“கைது செய்யப்பட்ட 43 நபர்களில் 38 ஆண்களும் 5 பெண்களும் அடங்குவர். இதில் 17 வங்காளதேசத்தினர், 11 மியான்மர் நாட்டவர்கள், 11 இந்தோனேசியர்கள், 2 பாகிஸ்தானியர்கள், ஒரு இந்தியர் மற்றும் ஓர் எகிப்தியர் எனப் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் போலி ஆவணங்களுடன் சிக்கியுள்ளனர். இவர்கள் மீது மேலதிக சட்ட நடவடிக்கைக்காக 29 சாட்சி அழைப்பாணைகளும் வழங்கப்பட்டுள்ளதாக” கெடா மாநிலக் குடிநுழைவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பெலாந்தே குடிநுழைவுத் தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து போலி ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், குடிநுழைவுச் சட்டங்களை மீறி நாட்டில் தங்கும் வெளிநாட்டவர்களுக்கும், அவர்களுக்கு வேலை வாய்ப்பு அல்லது தங்குமிடம் வழங்கி ஆதரவளிக்கும் முதலாளிகளுக்கும் எதிராகத் தயவுதாட்சணியமின்றித் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என கெடா மாநிலக் குடிநுழைவுத் துறை எச்சரித்துள்ளது.