மாணவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகச் சமூக ஊடகங்களில் எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஒரு சுயேச்சை பேச்சாளர் சம்பந்தப்பட்ட அனைத்துப் பள்ளி நிகழ்ச்சிகளையும் உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் உத்தரவிட்டுள்ளார்.
முழுமையான விசாரணைக்கு வழிவகுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அந்தப் பேச்சாளர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் உடனடியாக நிறுத்துமாறு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மாணவர்களின் பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரம் என்பதால் இது மிகவும் தீவிரமானதாகக் கருதப்படுவதாகவும், இது குறித்து விசாரிக்குமாறு தனது அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஃபட்லினா கூறினார். மேலும், இது குறித்த தகவல் தெரிந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.குழந்தைகளுக்குத் தகுந்த பாதுகாப்பும் ஆதரவும் கிடைப்பதை உறுதி செய்யக் காவல் துறை புகார்கள் மிக முக்கியமானவை. நமது பொறுப்பில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள முடியாது என்று அவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமையன்று ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், ஆசிரியரும் சமூக ஊடகப் பிரபலமுமான ஃபத்லி சல்லே, அந்தப் பேச்சாளர் மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரிகள் (Mara Junior Science Colleges) மற்றும் முழுமையான தங்கும் வசதி கொண்ட பள்ளிகளைச் (fully residential schools) சேர்ந்த மாணவர்கள் உட்பட பலரைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டினார்.கெடா மாநிலக் கல்வித் துறை அப்பேச்சாளர் மாநிலப் பள்ளிகளுக்குள் நுழைவதற்கான அனுமதியை ரத்து செய்துள்ளதாகத் தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், மற்ற மாநிலக் கல்வித் துறைகளும் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.