Offline
Menu
9 மாதங்களில் 37,313 சட்டவிரோதக் குடியேறிகள் கைது
By Administrator
Published on 10/04/2026 17:00
News
மலேசியக் குடிநுழைவுத் துறை நாடு தழுவிய நிலையில் அதிரடி வேட்டை

மலேசியா முழுவதும் கடந்த ஜனவரி 1 முதல் செப்டம்பர் 29 வரை மேற்கொள்ளப்பட்ட 10,374 தொடர் சோதனை நடவடிக்கைகளின் போது 37,313 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

 

குடிநுழைவுச் சட்ட மீறல்களுக்கு எதிரான இந்த நாடு தழுவிய அதிரடி வேட்டையின் போது மொத்தம் 137,603 நபர்கள் தீவிரத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டதாக அமைச்சர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

“நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் குடிவரவுத் துறை எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது. சட்டவிரோதக் குடியேறிகளைப் பிடிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துப் பணியில் அமர்த்தும் முதலாளிகள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும்” என்று, மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

 

சட்டவிரோதத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்திய அல்லது அவர்களுக்குப் புகலிடம் அளித்த 1,809 முதலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்; இதில் 1,692 பேர் மலேசியப் பிரஜைகள் ஆவர்.

 

முதலாளிகள் கைது செய்யப்படும் எண்ணிக்கை 2023-இல் 346 ஆக இருந்து, 2024-இல் 1,859 ஆகவும், கடந்த ஆண்டில் 2,202 ஆகவும் கடுமையாக உயர்ந்துள்ளது. இது ஏதோ ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மட்டும் செய்யப்படும் நடவடிக்கையல்ல, தினமும் தொடரும் என்றும், போலி ஆவணங்கள் தயாரிப்பது மற்றும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்போர் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

Comments