Offline
Menu
கல்விச் சுமையால் ஏற்பட்ட மனஅழுத்தம்
By Administrator
Published on 10/07/2026 15:00
News
பள்ளி கட்டடத்தின் 3-வது மாடியிலிருந்து குதித்த 13 வயது மாணவன்!

கெடா, கூலிம் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றின் 3-வது மாடி கட்டடத்திலிருந்து விழுந்து 13 வயது பள்ளி மாணவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான்.

 

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் பள்ளியின் இடைவேளை நேரத்தின் போது நிகழ்ந்ததாகக் கூலிம் மாவட்ட போலிஸ் தலைவர் சுப்ரிண்டண்டன் ஷாம்சுல் சின்ரிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

“பள்ளியின் ‘Block E’ படிக்கட்டுக்கு அருகில் மாணவன் ஒருவன் தரையில் விழுந்து கிடப்பதாக 48 வயது ஆசிரியர் ஒருவர் போலீசுக்குப் புகார் அளித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது, அந்த மாணவன் சுயநினைவுடன் பேசும் நிலையில் இருந்தான் என்றும், உடனடியாக அவன் சிகிச்சைக்காகக் கூலிம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்” என்றும் ஷாம்சுல் சின்ரிங் கூறினார்.

 

போலீசார் நடத்திய விசாரணையில், கல்வியில் ஏற்பட்ட கடும் மனஅழுத்தம் காரணமாகத் தானே 3-வது மாடியிலிருந்து கீழே குதித்ததாக அந்த சிறுவன் ஒப்புக்கொண்டுள்ளான். அதே பள்ளியில் படிவம் 4 பயிலும் தனது 16 வயது அக்காளின் கல்விச் சாதனையுடன் தனது படிப்பை அடிக்கடி ஒப்பிட்டுப் பார்த்து அவன் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

 

மேலும், அடுத்த வாரம் பள்ளித் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தனது பெற்றோர் வைத்திருந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போகுமோ என்ற அச்சமும் அவனுக்கு இருந்துள்ளது. இச்சம்பவத்திற்கு முதல் நாள், படிப்பு மற்றும் குடும்ப அழுத்தம் குறித்து அம்மாணவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுப் பின்னர் அதனை நீக்கியுள்ளதும் போலீஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Comments