Offline
Menu
சிலாங்கூர் மருத்துவமனை தாதியும் கணவரும் கோர விபத்தில் மரணம்
By Administrator
Published on 10/09/2026 20:00
News
சுகாதார அமைச்சர் ஆழ்ந்த இரங்கல்

சிலாங்கூர் மருத்துவமனை அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவின் தாதியரும் அவரது கணவரும், சுங்கை பூலோ சாலையில் லோரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

நேற்று பிற்பகல் 2.50 மணியளவில், சுங்கை பூலோ சாலை சியர்மாஸ் நுழைவுப் பாதையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர் கிளாந்தான் மாநிலம் தும்பாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய நூர் அதிரா யாகூப் என்றும், அவர் சிலாங்கூர் மருத்துவமனையில் திறைமைமிக்க தாதியராகப் பணிபுரிந்து வந்தார் என்றும் தெரிய வந்துள்ளது. அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அவரது கணவரும் 30 வயது மதிக்கத்தக்கவர் என்று, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் உதவி ஆணையர் ஷம்சுதீன் மாமட் கூறினார்.

 

கணவர் கட்டுப்பாட்டை இழந்த யமகா Y15 ரக மோட்டார் சைக்கிள், லோரி மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கணவனும் மனைவியும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லோரியை ஒட்டிய 30 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.

 

விபத்து தொடர்பான விசாரணைக்காக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட லோரி ஓட்டுநருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து சாலைப் போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41(1)-ன் கீழ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதனிடையே, மறைந்த தாதி நூர் அதிராவின் மறைவு சுகாதார அமைச்சுக்கு (KKM) ஈடு செய்ய முடியாத ஒரு பெரிய இழப்பு என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அகமட் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Comments