Offline
Menu
6% பொருளாதார வளர்ச்சியுடன் மானியங்கள், வேலைவாய்ப்புகளுக்குப் பிரதமா் முன்னுரிமை
By Administrator
Published on 10/10/2026 15:00
News
2027 வரவு செலவு திட்டம்

மலேசியாவின் இரண்டாம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி 6.0 சதவீதமாக உயர்ந்துள்ள வலுவான பின்னணியில், 2027-ஆம் ஆண்டிற்கான தேசிய வரவு செலவுத் திட்டத்தை பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

 

மொத்த கூட்டரசு அரசாங்கச் செலவினமாக 437.8 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக 83 பில்லியன் ரிங்கிட் மேம்பாட்டுச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

உலகளாவிய எரிசக்தி சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் நிதிப் பற்றாக்குறையை 3.5 சதவீதமாகக் குறைப்பதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.

 

“BUDI MADANI’ மற்றும் ‘சும்பங்கான் துனை ரஹ்மா’ (STR) போன்ற இலக்கிடப்பட்ட ரொக்க உதவிகளும் மானியங்களும் தொடர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. M40 நடுத்தர வர்க்கத்தினருக்கான இலக்கிடப்பட்ட மானியங்கள் மூலமும், குறைந்தபட்ச ஊதிய உயர்வு மூலமும் மக்களின் வாழ்க்கைச் சுமை குறைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

 

பொருள் மற்றும் சேவை வரி (GST) மீண்டும் அமல்படுத்தப்படாது என்றும், தற்போதுள்ள விற்பனை மற்றும் சேவை வரியே (SST) தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.

 

செமிகண்டக்டர் (Semiconductor), செயற்கை நுண்ணறிவு (AI), பசுமை எரிசக்தி மாற்றம் (Energy Transition) ஆகிய உயர் தொழில்நுட்பத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

 

நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதோடு, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

Comments