வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படாத சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்க அனுமதிக்கும் மலாக்கா மாநில அரசியலமைப்புத் திருத்தம், அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கக் கோரி மலாக்கா பாகாதான் ஹராப்பான் (PH) தலைவர்கள் இருவர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். மலாக்கா PH தலைவர் அட்லி ஜஹாரி மற்றும் அவரது துணைத் தலைவர் கூ போய் டியோங் ஆகியோர் வியாழக்கிழமையன்று மலாக்கா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்தனர். மேலும், மாநிலச் செயலாளர் மற்றும் சட்ட ஆலோசகர் ஆகியோரிடம் அதற்கான நீதிமன்ற அழைப்பாணையை இன்று வழங்கினர்.
‘ஶ்ரீ நெகிரி’ (Seri Negeri) வளாகத்திற்கு வெளியே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கூ, மலாக்கா வாக்காளர் என்ற அடிப்படையில் தான் இந்த வழக்கை தாக்கல் செய்ததாகவும், அரசியலமைப்புத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது ‘புக்கிட் கட்டில்’ (Bukit Katil) சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிலையில் அட்லி இந்த வழக்கை தாக்கல் செய்ததாகவும் தெரிவித்தார். மாநில DAP தலைவரான கூ, ஆகஸ்ட் 27ஆம் தேதியே இந்தத் திருத்தம் அரசிதழில் (gazette) வெளியிடப்பட்டிருந்தாலும், மாநில அரசின் இணையதளத்தில் அது சமீபத்தில்தான் பதிவேற்றப்பட்டதால், கடந்த வியாழக்கிழமைதான் தாங்கள் வழக்கை தாக்கல் செய்ததாகக் கூறினார். மாநிலத் தேர்தல் வரவிருப்பதால் இந்த வழக்கு தொடரப்படவில்லை; அது முற்றிலும் தற்செயலான நிகழ்வு.
ஜூலை 14ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்ட உடனேயே, இதை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல விரும்புவதாக நாங்கள் கூறியிருந்தோம். அரசிதழில் வெளியான பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடங்க முடியும் என்பதால், அதற்காக நாங்கள் காத்திருந்தோம் என்று கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினரான கூ மேலும் கூறினார். மலாக்கா சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மாநில அரசியலமைப்பு சட்டம் குறிப்பிடுவதால், இந்த நியமன ஏற்பாடு அரசியலமைப்புக்கு முரணானது என்று கூ மற்றும் அட்லி வாதிடுகின்றனர்.
நியமிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல; அவர்கள் எந்தத் தொகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. இருப்பினும், அவர்கள் சட்டமன்றத்தின் சட்டமியற்றும் முடிவுகளையும் அரசியல் சமநிலையையும் பாதிக்கக்கூடும் என்று கூ கூறினார். தேர்ந்தெடுக்கப்படாத ஏழு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வரை நியமிக்க அனுமதிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாரிசான் நேஷனல் தலைமையிலான மலாக்கா அரசாங்கத்திலிருந்து PH விலகியது.இந்தத் திருத்தம் ஜனநாயகக் கொள்கைகளுக்கு அடிப்படையிலேயே முரணானது என்று அந்தக் கூட்டணி கூறியது.
ஜோகூர் சட்டமன்றமும் ஜூன் மாதத்தில் இதேபோன்ற ஒரு திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது அந்த மாநிலத்திலுள்ள PH சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பைத் தூண்டியது. முன்னதாக, சபா, திரெங்கானு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களில் மட்டுமே நியமிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அனுமதிக்கும் சட்டங்கள் இருந்தன.