Offline
Menu
இரு வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பதின்ம வயதுச் சகோதரிகள் உயிரிழந்தனர்
By Administrator
Published on 10/17/2026 16:00
News

பேராக் மாநிலம், சித்தியவானில் உள்ள கம்போங் கோ (Kampung Koh) பகுதியில், அருகருகே இருந்த இரண்டு வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, பதின்ம வயது சகோதரிகள் இருவர் உயிரிழந்தனர். பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் சயானி சைடோன் கூறுகையில், இன்று காலை 9 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்த தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகத் தெரிவித்தார். உடனடியாக சித்தியாவான் மற்றும் செரி மஞ்சங் தீயணைப்பு நிலையங்களிலிருந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 18 மற்றும் 15 வயதுடைய இரு சகோதரிகள் தங்கள் வீட்டிற்குள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் இருவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது என்று அவர் கூறியதாக ‘உத்துசான் மலேசியா’  செய்தி வெளியிட்டுள்ளது.தலா 40 அடிக்கு 70 அடி அளவுள்ள, இரண்டு அடுக்கு மாடிகளைக் கொண்ட அந்த இணைந்த வீடுகள், தீயினால் பெருமளவில் சேதமடைந்தன.

இந்தத் தீ விபத்தில் இரண்டு புரோட்டான் சாகா (Proton Saga) கார்கள், ஒரு புரோட்டான் பெர்டானா (Proton Perdana) கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் என மொத்தம் நான்கு வாகனங்களும் சேதமடைந்ததாக சயானி சைடோன் தெரிவித்தார். காலை 10.30 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மீண்டும் தீப்பிடிக்க வாய்ப்புள்ள எஞ்சிய தணல்கள் அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்று தீயணைப்பு வீரர்கள் ஆய்வு செய்தனர். இந்த மீட்புப் பணியில், பந்தாய் ரெமிஸ் (Pantai Remis) தன்னார்வ தீயணைப்புப் படை உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 20 பேர் ஈடுபட்டனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்த விசாரணையில் தீயணைப்புத் துறையின் கே-9 (K9) மோப்ப நாய் பிரிவினரும் உதவி செய்தனர்.

Comments