Offline
Menu
புடுவில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 190 வெளிநாட்டவர்கள் கைது
By Administrator
Published on 10/18/2026 14:00
News

கோலாலம்பூர், புடுவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில், பொது அமைதிக்கு இடையூறு விளைவிப்பதாகக் கிடைத்த புகார்களின் அடிப்படையில், குடிவரவுத் துறையினர் இன்று அதிகாலை நடத்திய சோதனையில் 190 வெளிநாட்டவர்கள் மற்றும் இரு உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.இந்த பொழுதுபோக்கு மையம் மசூதி ஒன்றிலிருந்து வெறும் 10 மீட்டர் தொலைவில் இயங்கி வந்ததாக, குடிவரவு அமலாக்கப் பிரிவு இயக்குநர் பஸ்ரி ஒத்மான் தெரிவித்ததை மேற்கோள் காட்டி ‘பெர்னாமா’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

அங்கு வாடிக்கையாளர்களை உபசரிப்பதற்காகப் பல அறைகள் இருந்ததாகவும், ஒவ்வொரு அறையிலும் 50 முதல் 60 பேர் வரை நெருக்கடியாக அடைக்கப்பட்டிருந்தனர் என்றும் அவர் கூறினார்.கைது செய்யப்பட்டவர்களில் 99 ஆண்கள் மற்றும் 91 பெண்கள் அடங்குவர்; இவர்களின் வயது 20 முதல் 41-க்கு உட்பட்டது. இவர்களில் 188 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள், மற்ற இருவர் வங்கதேசம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று பஸ்ரி தெரிவித்தார்.

 

கைது செய்யப்பட்ட இரு உள்ளூர் ஆண்கள், அந்த மையத்தின் உரிமையாளர் மற்றும் பராமரிப்பாளர் என்று சந்தேகிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்டவர்களில் பலர், தங்குவதற்கான அனுமதிக்காலம் முடிந்தும் தொடர்ந்து தங்கியிருந்ததாகவும், அவர்களிடம் முறையான பயண ஆவணங்கள் இல்லை என்றும் பஸ்ரி கூறினார். அங்கு ஆபாசமான செயல்கள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், சில ஆணுறைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட அனைவரும், ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காகவும் விசாரணைக்காகவும் குடிநுழைவுத் தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Comments