Offline
Menu
காங்கோவில் தீயாக பரவும் எபோலா தொற்று
By Administrator
Published on 11/03/2026 13:00
News
5 ஆயிரம் பேர் பலி… உலக நாடுகளுக்கு எச்சரிக்கையா?

கின்ஷாசா காங்கோவில் எபோலா தொற்றுக்கு 5 ஆயிரம் பேர் பலியாகி உள்ள நிலையில், உலக நாடுகளுக்கு இது எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

 

எபோலா வைரசின் பாதிப்புக்கு காங்கோவில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்து உள்ளனர். அந்நாட்டின் 26 மாகாணங்களில் 8 மாகாணங்களில் தொற்று பரவி, உறுதியாகி உள்ளதுடன், சிகிச்சை மையங்களுக்கு வெளியே பல மரணங்கள் நிகழ்ந்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.

 

பயண தடை
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில், கடந்த மே மாத மத்தியில் பாதிப்பு தெரிய தொடங்கி, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இதனை முன்னிட்டு, உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் ஒன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது. இந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தடை விதித்து உள்ளன. இந்த பரவலுக்கு காரணம் பண்டிபக்யோ என்ற வைரஸ் என கண்டறியப்பட்டு உள்ளது.

 

நைஜீரியாவில் பாதிப்பு
இந்த வைரசுக்கு நோய் தடுப்பு மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ எதுவும் இல்லை. இதனால், தொடர்ந்து காங்கோவில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடையாளம் காண்பவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு கொண்டு செல்கின்றனர்.

 

கென்யா, உகாண்டா நாடுகளுக்கு பாதிப்பு பரவி இருந்த நிலையில், நைஜீரியாவிலும் முதன்முறையாக பண்டிபக்யோ வைரசால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். இதுபற்றி உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், உகாண்டாவில் இருந்து நைஜீரியாவுக்கு பயணித்து வந்த பெண்ணுக்கு கடந்த 7-ந்தேதி அறிகுறிகள் தென்பட தொடங்கின.

 

கொடிய பரவல்
தொடர்ந்து அவர் கண்காணிக்கப்பட்டதில், கடந்த 17-ந்தேதி தொற்று உறுதியாகி இருந்தது. இதனால், காங்கோ, கென்யா மற்றும் உகாண்டாவை அடுத்து 4-வது நாடாக நைஜீரியாவிலும் தொற்று பரவியுள்ளது.

 

2014-2016 ஆண்டுகளில் கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோன் நாடுகளில், எபோலா பரவலின்போது 28,600 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனை தொடர்ந்து, ஏற்பட்ட 2-வது கொடிய பரவலாக தற்போது காணப்படும் வைரசின் பரவல் உள்ளது.

 

உலக அச்சுறுத்தல்
உலகிலேயே மிக கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றான இது உடலின் உட்புற உறுப்புகளில் கடுமையான ரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணம் ஆகியவற்றை ஏற்படுத்த கூடும். காங்கோவின் அண்டை நாடுகளான தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவியிருக்கும் என அஞ்சப்படுகிறது.

 

தொடர்ந்து கிழக்கு காங்கோவில் விரைவாக பரவி வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவின் கென்யா, உகாண்டா நாடுகளில் தொற்று பரவிய சூழலில், நைஜீரியாவில் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், மேற்கு ஆப்பிரிக்காவிலும் தொற்று பரவி உள்ளது. இது உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதுடன் எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

Comments