மலேசியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், தங்களது தண்டனைக் காலத்தின் பாதியைச் சிறையிலும் மீதிப் பாதியை வீட்டுக்காவலிலும் அனுபவிக்க அனுமதிக்கும் புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என அமானா கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் சாபு வலியுறுத்தியுள்ளார். இந்த நடைமுறை அனைவருக்கும் சமமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், SRC International வழக்கில் எஞ்சியுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிப்பதற்காக நேற்று காஜாங் சிறையிலிருந்து கோலாலம்பூரில் உள்ள தனது இல்லத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாட் சாபு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
“சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். நீதி என்பது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கிடைக்கும் சலுகையாக இருக்கக்கூடாது. மலேசியாவில் இருவேறு நீதி முறைகள் இருக்க முடியாது” என அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஒருவரின் பதவி, அரசியல் செல்வாக்கு அல்லது குடும்பப் பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் சட்டத்தின் முன் சமத்துவம் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சருமான மாட் சாபு, தனது நிலைப்பாடு நஜிப் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிரான தனிப்பட்ட விரோதத்தால் உருவானதல்ல என்றும் விளக்கமளித்துள்ளார்.
அனைவருக்கும் சமமான உரிமைகளை உறுதிப்படுத்தும் சட்டத்தை உருவாக்கத் தொண்டு நிறுவனங்கள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக அமைப்புகள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், இந்த முயற்சிகளுக்கு ஆதரவாகத் தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை தனது முழு அமைச்சர் சம்பளத்தையும் வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.