போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கே சமர்ப்பித்த பதவி விலகல் கடிதத்தை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அது தொடர்பாக அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு வீட்டுக்காவல் அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தோணி லோக்கே தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். இது ஒற்றுமை அரசாங்கத்திற்குள் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது பதவி விலகல் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அன்வார் தெளிவுபடுத்தியுள்ளார்.
“அவரது பதவி விலகல் கடிதம் எனக்குக் கிடைத்துள்ளது. உடனடியாக அமலுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தாலும், அதனை நான் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தை நிதானமாக ஆராய்வதற்கு நேரம் எடுத்துக்கொள்வேன். அவசரப்பட வேண்டிய அவசியமில்லை” என அவர் கூறினார்.
இதனிடையே, நாளை நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் இடையே ஏற்பட்டுள்ள அரசியல் கருத்து வேறுபாடுகள் தற்காலிகமானவை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
“தேர்தல் காலத்தில் அரசியல் சூழல் சற்று சூடுபிடிப்பது வழக்கமான ஒன்றுதான். தேர்தல் முடிந்ததும் அது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமும் வழக்கம்போலவே நடைபெற்றது. எந்தப் பிரச்சினையையும் நான் கவனிக்கவில்லை” என பிரிக்ஃபீல்ட்ஸில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அன்வார் தெரிவித்தார்.