Offline
Menu
இளம் மாடல் அழகி இவானா ஸ்மித்தின் மரணம்!
By Administrator
Published on 11/14/2026 11:00
News
RM11 இலட்சம் இழப்பீடு ரத்து – மேல்முறையீட்டை கைவிட்ட குடும்பத்தினர்!

பெட்டாலிங் ஜெயா, 

கோலாலம்பூரில் மர்மமான முறையில் உயிரிழந்த நெதர்லாந்தைச் சேர்ந்த இளம் மாடல் அழகி இவானா ஸ்மித்தின் மரணம் தொடர்பான விசாரணையில் குறைபாடுகள் இருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட RM11 இலட்சம் இழப்பீட்டை ரத்து செய்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி, கோலாலம்பூர் CapSquare Residences அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆறாவது மாடி பால்கனியில் 18 வயதான இவானா ஸ்மித் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் 20ஆவது மாடியிலுள்ள குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் அவரது மரணம் எதிர்பாராத விபத்து எனக் கருதப்பட்ட போதிலும், பின்னர் உயர்நீதிமன்றம் அடையாளம் தெரியாத நபர் அல்லது நபர்களால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பை மாற்றியிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணையில் குறைபாடுகள் இருந்ததாகக் கூறி அவரது தாயார் தொடர்ந்த சிவில் வழக்கில், கடந்த 2025 ஜூலை 29ஆம் தேதி உயர்நீதிமன்றம் RM11 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருந்தது. எனினும், கடந்த அக்டோபர் 14ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை ரத்து செய்தது.

இதுகுறித்து குடும்பத்தினரின் வழக்கறிஞர் எஸ்.என். நாயர் வெளியிட்ட அறிக்கையில், மேல்முறையீட்டைத் தொடர வேண்டாம் என்ற குடும்பத்தின் முடிவு, போலீஸ் விசாரணையில் அவர்கள் திருப்தியடைந்துவிட்டதாகவோ, தங்களது சந்தேகங்களுக்குப் பதில் கிடைத்துவிட்டதாகவோ அர்த்தமல்ல எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், சிவில் வழக்கு முடிவுக்கு வந்தாலும் இவானாவின் மரணத்தின் பின்னணியிலுள்ள உண்மைகளைக் கண்டறியும் பொறுப்பு அதிகாரிகளுக்கு தொடர்ந்து இருப்பதாகவும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து குடும்பத்தினருக்கு முறையாகத் தகவல் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments