Offline
Menu
2029ஆம் ஆண்டு முதல் 6 வயதுடைய மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேருவது கட்டாயமாக்கப்படுகிறது
By Administrator
Published on 11/25/2026 16:00
News

சிப்பாங்: 2029-ஆம் ஆண்டு முதல், 6 வயதுடைய குழந்தைகள் முதலாம் ஆண்டில் (Year 1) சேருவதை அரசாங்கம் கட்டாயமாக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் இந்த ஆண்டிலிருந்தே தொடங்கப்பட்டுள்ளன. கல்வித்துறை தலைமை இயக்குநர் அஸாம் அகமது கூறுகையில், இந்தத் திட்டம் சுமூகமாகச் செயல்படுவதை உறுதிசெய்ய, 2027 மற்றும் 2028-ஆம் ஆண்டுகளில் 6 வயதுடைய குழந்தைகள் முதலாம் ஆண்டில் சேருவது விருப்பத்திற்கு உட்பட்டதாக (optional) இருக்கும் என்றும், 2029-ஆம் ஆண்டு முதல் அது கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரை, கல்வி அமைச்சு  modular எனப்படும் தொகுப்பு முறை வகுப்பறை கட்டுமான அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. இது குறைந்த காலத்திற்குள் கற்றல் இடங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யவும், அதே வேளையில் ஏற்கனவே உள்ள வகுப்பறைகள், முன்பள்ளி வசதிகளைச் சிறப்பாகப் பயன்படுத்தவும் வழிவகுக்கிறது. மேலும், 6 வயது மாணவர்களின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த வயதுடைய மாணவர்களைக் கையாள்வதற்குத் தேவையான கற்பித்தல் திறன்களை ஆசிரியர்கள் கொண்டிருப்பதை உறுதிசெய்ய, அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளும் வலுப்படுத்தப்படுகின்றன என்று அவர் ஊடகங்களுக்கான விளக்கக் கூட்டத்தில் தெரிவித்தார்.

 

அடுத்த ஆண்டு முதலாம் ஆண்டில் சேரவுள்ள 6 வயதுடைய மாணவர்களிடம் இருந்து இதுவரை 73,498 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், 7 வயதுடைய பிரிவிலிருந்து 418,151 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அசம் குறிப்பிட்டார். சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர் ஆகிய மாநிலங்களில்தான் 6 வயதுடைய மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் அதிக அளவில் பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.

 

மிக இளம் வயதிலேயே முறையான கல்வியை அறிமுகப்படுத்தும் திட்டம் புதியதல்ல என்றும், இதற்கான கலந்துரையாடல்கள் 2017ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டன என்றும் அஸாம் தெரிவித்தார். இருப்பினும், அந்த காலகட்டத்தில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நாட்டின் பொருளாதாரச் சூழல், கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரசியல் உறுதிப்பாடு போன்ற பல்வேறு காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

 

பல்வேறு அமைச்சகங்களின் ஆதரவும், பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலைமையும்தான், கூடுதல் வகுப்பறைகளைக் கட்டுவது உள்ளிட்ட முக்கிய அம்சங்களை ஒருங்கிணைக்க உதவியதாக அசம் கூறினார். 1996ஆம் ஆண்டின் கல்விச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவது உட்பட, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்ய, கல்வி அமைச்சு பல்வேறு உருவகப்படுத்துதல் (simulation) சோதனைகளை நடத்தி வருகிறது. 

 

சட்டத் திருத்தங்கள் மற்றும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உள்ளடக்கிய எங்களது உருவகப்படுத்துதல் சோதனைகளின் அடிப்படையில், 2029-ஆம் ஆண்டில் 6 வயதுடைய குழந்தைகள் முதலாம் ஆண்டில் சேருவதைக் கட்டாயமாக்குவதற்கு நாங்கள் முழுமையாகத் தயாராக இருப்போம் என்று அவர் கூறினார்.

Comments