அரசாங்கத்தையும், அதிகாரத்தையும், பாசிசத்தையும் மௌனத்தின் மூலம் கூட ஆட்டம் காண வைக்க முடியும் ;
மௌனத்தின் மூலம் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்க முடியும் என்று நிரூபித்த மாபெரும் திரைக்கலைஞன் சார்லி சாப்ளின் பிறந்தநாளும் கொண்டாடப்படுகிறது.
40 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் சார்லி சாப்ளினுக்கு குடியுரிமை கொடுக்க அமெரிக்கா மறுத்துவிட்டது.
சாப்ளின் நடித்த Modern Times என்ற படத்தில் தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல்,
அதிகாரமயமாக்கல் என்று நவீனத்துவத்தின் பல்வேறு அம்சங்களின் மனிதநேயமற்ற விளைவுகளை அவர் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருந்தார். இதனாலயே சாப்ளின் ஒரு இடதுசாரி என்று முத்திரை குத்திய ( முழுக்கவும் கார்ப்பரேட்டை நம்புகிற, கம்யூனிஸ்ட் ஏதிர் மனப்பான்மை கொண்ட ) அமெரிக்கா அவருக்கு குடியுரிமை தர மறுத்தது.
அது மட்டுமல்லாமல், தன் படமான ‘லைம்லைட்’ விளம்பர வேலைகளுக்காக இங்கிலாந்து சென்று திரும்பிய சாப்ளினை அமெரிக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்தது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு (கம்யூனிஸ்ட் ) எதிராக, ஆதாரங்களுடன் தான் ஒரு தூய்மைவாதி என்று நிரூபித்தால் அமெரிக்காவிற்குள் நுழையலாம் என்றும் சாப்ளினுக்கு விதி வகுக்கப்பட்டது.
அப்படியான அமேரிக்கா தனக்கு வேண்டாம் என்று அந்நாட்டிற்குள் நுழையாமலேயே திரும்பிச் சென்றார். அவரை இங்கிலாந்து இருகரம் நீட்டி வரவேற்று தழுவிக் கொண்டது.
‘குடியுரிமை' அளிக்க முடியாது என்று வெளியே அனுப்பிய சாப்ளினை அதற்குப்பின் 20 வருடங்கள் கழித்து, அதாவது, 1972-ல் அமெரிக்கா அவரை அழைத்தது. தங்க தாம்பாளத்தில் அழைப்பிதழ் வைத்து. ஆமாம். அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருது அளிப்பதற்காக அழைத்தது. ஆஸ்கார் விருதும் வழங்கி கெளரவித்தது.
அந்த பிரம்மாண்ட விழாவில் பேசுவதற்கு சாப்ளினுக்கு எதுவும் இருக்கவில்லை. ஆனால், அங்கே பார்வையாளர்களில் குழுமியிருந்த அனைவரும் சுமார் 12 நிமிடங்கள் அவருக்காக எழுந்து நின்று கைத்தட்டி கெளரவித்தனர். அமெரிக்க ஆஸ்கார் வரலாற்றில் ஒரு கலைஞனுக்கு கிடைத்த அதிக நிமிட கெளரவம் இன்றுவரை இது ஒன்றே. . tamilAifm.Com
‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தின் மூலம் பாசிசத்திற்கு எதிராக ஓங்கிக்குரல் கொடுத்த சாப்ளின், உலக முழுக்க உள்ள கலை ரசிகர்களின் பார்வையில் மனிதநேயத்துக்கும் சமத்துவத்துக்காக மட்டுமே உழைத்தவராக அறியப்படுவார். உலகின் மாபெரும் கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.