மெட்ரிகுலேஷன் உயர்கல்வி வாய்ப்பு இவ்வாண்டு மீண்டும் மறுக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. எஸ்பிஎம் பரீட்சையில உயர்புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் இதயங்கள் நொறுங்கத் தொடங்கியிருக்கின்றன.
நாட்டின் 17 அரசாங்க மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் உள்ளன. இவற்றுக்கு விண்ணப்பம் செய்த உயர்புள்ளிகளைப் பெற்ற பல மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியர்களும் வரி செலுத்துகின்றனர். ஆனால், உயர்கல்வியைப் பொறுத்தவரையில் அவர்களின் பிள்ளைகள் 2ஆம் தரமாகவே நடத்தப்படுகின்றனர்.
உயரிய அடைவு நிலையையும் புள்ளிகளையும் பெற்றிருக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படுவது ஒரு பாவச் செயலாகும். தோலின் நிறம் பார்த்து வாய்ப்புகள் வழங்கப்படுவது மகா பாவமாகும்.
அரசாங்கத்தால் நடத்தப்படும் மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் 40 ஆயிரம் இடங்களைக் கொண்டிருக்கின்றன. 2019ஆம் ஆண்டிலிருந்து இந்த எண்ணிக்கை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.
இந்த எண்ணிக்கையில் 90 விழுக்காடு பூமிபுத்ரா மாணவர்களுக்கும் எஞ்சிய 10 விழுக்காடு பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கும் (சபா, சரவாக் உட்பட) ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாராவின் 2 கல்லூரிகளிலும் 100 விழுக்காடு பூமிபுத்ரா மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது எழுதப்படாத ஒரு கொள்கையாக இன்றளவும் வருகிறது.