Offline
இறந்தவர்’ உயிரோடு வந்ததால் உறவினர்கள் மகிழ்ச்சி: தெலுங்கானாவில் ருசிகர சம்பவம்
News
Published on 06/27/2024

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், நவாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பா, 40. இவருக்கு விமலா என்கிற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு தாண்டூர் எனும் இடத்தில் சிமெண்ட் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வந்துள்ளார் எல்லப்பா. தனது நண்பருடன் சேர்ந்து மது அருந்தியவர், போதை அதிகமாக அங்குள்ள ரயில் நிலைய மேடையில் படுத்துத் தூங்கியுள்ளார். அப்போது, எல்லப்பாவின் கைப்பேசி, பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்ற அவரது நண்பர் இரவு 11 மணியளவில் ரயில் மோதி உயிரிழந்தார். கைப்பேசியை மீட்ட காவலர்கள், அதில் கிடைத்த எண்களை அழைத்து தகவல் தெரிவித்தனர். சிமெண்ட் கடை முதலாளியிடம் எல்லப்பா இறந்துபோன தகவலைக் கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர், எல்லப்பாவின் மனைவி பிள்ளைகளிடம் தகவல் கூற அவர்கள் கதறி அழுதுள்ளனர். பின்னர், விகாராபாத் அரசு மருத்துவமனைக்குச் சென்று, சடலத்தைக் கொண்டு வந்து வீட்டருகே இறுதிச் சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். கிராம மக்கள் ஏராளமானோர் இறுதிச் சடங்குக்கு வந்திருந்தனர். அதேநேரம், போதை தெளிந்த எல்லப்பா, மீண்டும் பணிக்காக சிமெண்ட் கடைக்கு வந்துள்ளார். அங்கு அவரை பார்த்த கடை முதலாளி “நீ இன்னும் சாகலையா?” என ஆச்சரியமடைந்துள்ளார்.

உடனே சிமெண்ட் கடையில் இருந்து தனது மனைவி விமலாவுக்கு போன் செய்த எல்லப்பா, நான் எல்லப்பா பேசுகிறேன். நான் சாகவில்லை. உயிருடன்தான் உள்ளேன். சடங்குகளை நிறுத்துங்கள். நான் ஊருக்கு வருகிறேன் என தகவல் கொடுத்தார். உடனே இறுதிச் சடங்குகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் அந்த உடல் விகாராபாத் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. இறந்தவரின் உடல் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போனதால் இந்தத் தவறு நடந்ததாகக் கூறி எல்லப்பாவிடமும் அவரது குடும்பத்தாரிடமும் ரயில்வே காவலர்கள் மன்னிப்பு கேட்டனர்.

Comments