Offline
பிரியாணியில் கோழிக்கால் இல்லை’: கல்யாண மண்டபத்தில் களேபரம்
News
Published on 06/27/2024

ரேலி: இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் விருந்திற்கு முக்கிய இடமுண்டு. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் அண்மையில் ஒரு திருமண நிகழ்வின்போது இடம்பெற்ற விருந்தில் பரிமாறப்பட்ட பிரியாணியில் கோழிக்கால் இல்லை எனக் கூறி, பெருஞ்சண்டையே மூண்டது. தங்களுக்குப் பரிமாறப்பட்ட கோழி பிரியாணியில் கோழிக்கால் இல்லாததால் மணமகன் வீட்டார் பொங்கி எழுந்தனர். இதுகுறித்து அவர்கள் புகார் கூற, பின்னர் அது சண்டையாக மாறியது.

இதுகுறித்த காணொளி இணையத்தில் பரவி வருகிறது. அதில், மணமகன், மணமகள் வீட்டார் என இருதரப்பினரும் மாறி மாறி அடித்துக்கொள்வதும், உதைப்பதும், குத்துவிடுவதும், நாற்காலிகளை வீசியெறிவதும் தெரிகிறது. சண்டையில் மணமகனும் குதித்ததுதான் பெருவியப்பு. திருமண மண்டபமே வன்முறைக்களமாக மாறிய நிலையில், திருமணத்திற்கு வந்திருந்த ஒருவர் அதனைத் தனது கைப்பேசியில் பதிவுசெய்து சமூக ஊடகத்தில் உலவவிட, அது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஆனாலும், அச்சண்டை குறித்து இதுவரை காவல்துறைக்கு எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை. இதனிடையே, சம்பவம் குறித்துத் தாங்கள் அறிந்துள்ளதாகவும் எவரேனும் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Comments