மலேசியத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் 2024 தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு சட்டதிருத்த மசோதாவுக்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
நாடாளுமன்ற மக்களவையில் இதன் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற பண்டார் கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் கெல்வின் இ லீ வூயென், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியம் ஆகிய இருவரும் தொழிலாளர் நலன் காப்பதற்கு பெர்கேசோ முன்னெடுத்திருக்கும் பல்வேறு திட்டங்களை வரவேற்றனர்.
இத்திருத்தங்களானது தொழிலாளர் சமூகப் பாதுகாப்பைப் பன்மடங்காக உயர்த்தும் முயற்சியின் ஓர் அங்கமாகும். தற்போது நடைமுறையில் இருக்கும் தொழிலாளர் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு மடானி அரசாங்கமும் கெசுமா (மனிதவளம்) அமைச்சும் ஆக்கப்பூர்வ மான திட்டங்களை வகுத்து வருகின்றன.
தொழிலாளர் வர்க்கத்தினரின் நால்வாழ்வை மேம்படுத்துவதற்குரிய இத்திட்டங்கள் புதிய சட்டதிருத்தத்தின் வழி மேலும் வலுப்பெறும் என்று இவ்விரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
இவை அனைத்திற்கும் பெர்கேசோ முழுப்பொறுப்பு ஏற்கிறது. மடானி அரசாங்கம் பணத்தைச் சேமித்திடலாம் என்று கெல்வின் இ குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய சுங்கை சிப்புட் பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியம், தொழிலாளர் நலன்களைக் காத்திடுவதற்கு கெசுமா அமைச்சு ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. தொழிலாளர் நலன்கள், வாழ்வாதாரம் தொடர்ந்து காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தச் சட்டதிருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அமைச்சு சமர்ப்பித்திருக்கிறது.
தொழிலாளர் வர்க்கத்தினர் மத்தியில் உள்ள ஏழ்மை நிலையை குறைப்பதற்கும் இச்சட்டதிருத்தம் பெரும் உதவியாக இருக்கும். இதுதவிர நடைமுறையில் இருக்கும் தொழிலாளர் பாதுகாப்புக்கு பெர்கேசோ வழங்கிடும் உதவிகள் இப்போதும் எதிர்காலத்திலும் தொடர்ந்து அதிகரிப்பதை இந்த சட்டதிருத்தம் உறுதி செய்யும் என்ற நிலையில் தாம் அதனை முழுமையாக ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார்.