கோலாலம்பூர்:
கடந்த 2022ஆம் ஆண்டு அகற்றப்பட்ட ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான யூபிஎஸ்ஆர் தேர்வும், மூன்றாம் படிவ மாணவர்களுக்கான பிடி3 தேர்வும் அவசியம் மீண்டும் அமலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் முன்னாள் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்ஸிர் காலிட்.
மாணவர்களின் கல்வி அடைவுநிலைகளில் இந்த இரண்டு பரீட்சைகளும் நீண்ட காலமாகவே மிக முக்கிய பங்களிப்பைக் கொண்டிருந்தன என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை. மாணவர்கள் நாட்டின் எதிர்கால வாரிசுகள் என்பதன் அடிப்படையில் அவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்குவதில் இந்த இரண்டு தேர்வுகளுமே இன்றியமையாதப் பங்களிப்பைக் கொண்டிருக்கின்றன.
எனவே அந்தத் தேர்வுகளை மீண்டும் அமல்படுத்துவது சாலச் சிறந்த நடவடிக்கையாக அமைந்திடும் என்று அவர் கூறினார்.
கடந்த 2022ஆம் ஆண்டு சாதக பாதகங்களை விரிவான ஆய்வு செய்யாமல் அப்போதைய கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ரட்ஸி முகமட் ஜிடின் அவசரகோலத்தில் அந்த இரண்டு தேர்வுகளையும் அகற்றிவிட்டார்.
அதற்கு மாற்றாக பிபிடி எனப்படும் வகுப்பறை மதிப்பீட்டு முறையும் பிபிஎஸ் எனப்படும் பள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டு முறையும் அமலுக்கு வந்தன. இவையும் கூட மாணவர்களின் உண்மையான அடைவுநிலையைக் கண்டறிவதில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை .
ஆகவே யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகள் மீண்டும் அமலாக்கம் பெற வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி முன் வைத்துள்ள கருத்து மிகவும் வரவேற்கக் கூடியதாகவே உள்ளது என்றார் அவர்.
இந்தத் தேர்வுகள் மீண்டும் ஏற்படுத்தப்படுவதன் வழி மாணவர்களின் உண்மையான கல்வி அடைவுநிலைகள் கண்டறியப்பட வகை செய்யப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அதனை ஆக்கப் பூர்வமானதாக கருத வேண்டும்.