ஜாலான் சிரம்பான்-தம்பினில் (பிடாரா போக்குவரத்து விளக்குக்கு அருகில்) இன்று 10 வாகனங்கள் மோதிய விபத்திற்கு காரணமான லோரி ஓட்டுநர் மெத்தம்பேத்தமைன் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. 38 வயதான அவருக்கு எதிராக காவலில் வைக்க உத்தரவுக்கு போலீசார் விண்ணப்பிப்பர் என்று சிரம்பான் காவல்துறை தலைவர் ஏசிபி முகமது ஹட்டா சே டின் தெரிவித்தார்.
அவரது சிறுநீர் பரிசோதனையில் மெத்தம்பேத்தமைனுக்கு உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை நடந்து வருகிறது. விபத்து பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்லலாம் அல்லது விசாரணை அதிகாரியை 019 4611794 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 44(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் நேற்றிரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பிற்பகல் 1.25 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், கற்களை ஏற்றிச் சென்ற லோரி மோதியதில் 31 வயதுடைய நபர் ஒருவர் தனது புரோட்டான் ஈஸ்வரா காரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கூடுதலாக, 48 வயதான பெண் ஒருவர் வலது கை உடைந்ததால் சிரம்பான் துவாங்கு ஜாபர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார். அதே நேரத்தில் சிறிய காயங்களுக்கு ஆளான மற்ற பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
முகமது ஹட்டா முதற்கட்ட விசாரணையில், வாகனங்கள் மெதுவாக நகர்ந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும் தம்பினில் இருந்து சிரம்பான் நோக்கிச் சென்ற ஹினோ லோரி ஓட்டுநர், தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது என்றும் கூறினார். பின்னர் லோரி சறுக்கி முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதனால் பல வாகனங்கள் விபத்தில் சிக்கியதாக அவர் கூறினார்.