கடந்த ஆண்டு காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, இருதரப்பினரிடையே தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போர் காரணமாக தெற்கு காசாவில் உள்ள பள்ளி ஒன்றில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 13 குழந்தைகள், 6 பெண்கள் உள்பட மொத்தம் 22 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு பழைய பள்ளிக்கூட வளாகத்திற்குள் செயல்பட்ட வரும் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டு மையத்தை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பெண்களும், அவர்களின் குழந்தைகளும் மைதானத்தில் அமர்ந்திருந்தனர். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென 2 ராக்கெட் குண்டுகள் வந்து வெடித்தது,’ என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 மருத்துவப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.