Offline
ஆதரவற்ற சிறார்கள் மீதான பாலியல் கொடுமை – நாட்டில் என்னதான் நடக்கிறது?
Published on 09/23/2024 15:52
News

ஒரு பிரபல சிறார்கள் பராமரிப்பு இல்லத்திலிருந்து ஒன்றுக்கும் பதினெழுக்கும் இடைப்பட்ட வயதுடைய 402 சிறார்கள் மீட்கப்பட்ட தாகக் காவல் துறையின் தலைமை அதிகாரி டான் ஶ்ரீ ரசாரூடீன் உசேன் அறிவித்தார். இந்தச் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களை நாடெங்கும் காணலாம். அவற்றை ஒரு பலமான நிறுவனம் (GISB) நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட 402 சிறார்கள் சிலர் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதற்கான சந்தேகம் பலமாக இருப்பதாகவும், விசாரணை நடந்து கொண்டிருப்பதாகக் காவல் துறை அதிகாரி விளக்கமளித்துள்ளார். இதில் கொடுமை என்னவெனில் பாதிப்புற்றிருப்பது ஆதரவற்ற சிறார்கள்.

மலேசியர்கள் செப்டம்பர் திங்கள் பதினாறாம் நாள் சுதந்திர மலேசிய தினத்தைக் கொண்டாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போது இந்தச் சிறார்கள் குறித்த சங்கடமான செய்தியாக இருந்தாலும் காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கையைப் போற்றாமல் இருக்க முடியாது.

காலங்கடந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் மலேசியர்கள் ஒருவகையில் ஆறுதல் பெருமூச்சு விடுவார்கள் என்பது திண்ணம். அதே சமயத்தில், ஒரு நிறுவனம் இத்தகைய சிறுவர் பராமரிப்பு இல்லங்களை நடத்துகிறது என்றால் அவை சட்டத்திற்கு உட்பட்டு இயங்குகின்றனவா?

பாலியல் குற்றம் கடுமையானது மட்டுமல்ல குற்றச் செயலுக்கு உட்படுத்தப்பட்ட பாலியல் குற்றம் புரிந்தவரோடு சமரசம் செய்து கொள்ள முடியாது. அதுமட்டுமல்ல, புகார் செய்தவர் அதைத் திரும்பப் பெறுவது எளிதல்ல. அதிலும் சிறுவரைப் பாலியலுக்கு உட்படுத்தப்படுவது கடுமையான குற்றமாயிற்றே!

 

எங்ஙனம் காவல் துறையும் சட்டத்துறையும் கவனக்குறைவாக இருந்தன? கவனக்குறைவு என்பது அலட்சிய மனப்பான்மையை வெளிப்படுத்தும். ஆனால், பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பலியாளின் மனநிலை எப்படி பாதிப்படைந்திருக்கும் என்பதை உணராதச் செயலாகும்.

அடுத்து, சமூக நலம் பாதுகாக்கும் துறை. சிறார்களைப் பாதுகாக்கும் இல்லம் தங்களின் எல்லைக்குள் இயங்குகின்றன எனின் அவை சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதோடு அங்கு தங்கியிருக்கும் சிறார்கள் எந்த ஒரு சங்கடத்திற்கும், அவமதிப்பிற்கும், கொடுமைக்கும் உட்படுத்தப்படாமல் இருப்பதைக் கண்காணிக்கும் பொறுப்புடையவர்களாவர்.

எனவே, இந்த 402 சிறார்கள் மீட்கப்பட்ட  இல்லங்களை சமூக நல அதிகாரிகள் எப்பொழுதாவது சென்று சோதனை செய்தார்களா? அங்கு குடியிருக்கும் சிறார்களின் நலன்களைக் குறித்து அவர்கள் சேகரித்த குறிப்புகள் தான் என்ன? இவையும் முக்கியம் தானே!

சமூக நல துறையானது சிறார்களின் நலனில் மிகுந்த கவனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

அடிக்கடி சோதனை நடத்துவதால் பிள்ளைகளின் நலன் பாதுகாக்கப்படும். சமூக நல அதிகாரிகள், அரசு ஊழியர்கள். சமுதாயத்தில் நிகழும் கொடுமையான நிகழ்வுகளை, குறிப்பாக சிறார்கள், வயதானவர்கள் போன்றோரின் நலனில் மிகுந்த கவனம் செலுத்தும் பொறுப்புடையவர்கள். பலவீனமான, வலுவிழந்த முதியவர்களுக்குப் பாதுகாப்பு நல்கும் அரணாகச் சமூக நலனபிவிருத்தி துறை இயங்க வேண்டும். அந்தக் கடமைகளை நிறைவேற்றியதா அந்த இலாகா?

சிறார்களுக்கு எதிரான குற்றச் செயல்களைக் கவனத்தில் கொள்ளும் போது குற்றம் புரிந்தவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கேட்பதை விட, இந்தக் குற்றங்கள் நிகழாமல் இருக்க நாம் என்ன செய்தோம், செய்கிறோம் என்பதே முக்கியமான கேள்வி!

இந்தப் பிரச்சினையை இன, சமயக் கோணங்களில் இருந்து பார்ப்பதைவிட – அணுகுவதைவிட மனித நேயத்துடன் பார்க்க வேண்டும்.

 

Comments