Offline
மாநகராட்சி மைதான இரும்பு கேட் விழுந்து 10 வயது சிறுவன் பலி
Published on 09/23/2024 15:55
News

மல்லேஸ்வரம்: பெங்களூரு மாநகராட்சி விளையாட்டு மைதானத்தின் நுழைவாயில் இரும்பு கேட் விழுந்ததில், 10 வயது சிறுவன் உயிரிழந்தான்.

பெங்களூரு மல்லேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் விஜயகுமார் – பிரியா தம்பதி. விஜயகுமார் ஆட்டோ ஓட்டுகிறார். பிரியா, வீட்டு வேலைக்கு செல்கிறார். இவர்களுக்கு 10 வயதில் நிரஞ்சன் என்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகனும், ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று மாலை தன் சைக்கிளுக்கு செயின் போடுவதற்காக, நிரஞ்சன் தன் நண்பர்களுடன் சென்றார். சைக்கிள் செயின் போட்ட பின், வீட்டின் அருகில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்துக்கு சென்றுள்ளனர்.

மைதானத்தின் நுழை வாயில் கேட், 10 அடி உயரம் உள்ளது. கேட்டை பிடித்து இழுக்கும் போது, நிரஞ்சன் மீது கேட் விழுந்தது. இதில், நிரஞ்சனின் வாய், தலையில் படுகாயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது.

அங்கிருந்தவர்கள், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்படும் என்பதால், அப்பகுதியில் இருந்தவர்கள், இரு சக்கர வாகனத்தில் நிரஞ்சனை, மல்லேஸ்வரம் கே.சி.ஜெனரல் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் சிறுவன் உயிரிழந்தான்.

சைக்கிள் செயின் போட செல்வதாக, அவனது நண்பனுடன் சென்றார். ஆனால், அவன் மீது கேட் விழுந்து இறந்ததாக கூறுகின்றனர். என் மகன் உடலை பார்க்க, எனது கணவர் அனுமதிக்கவில்லை. மகனை இழந்த நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை.

நடக்க கூடாத சம்பவம் நடந்துவிட்டது. மாநகராட்சி அதிகாரிகளின் தவறா அல்லது பூங்கா ஒப்பந்தம் எடுத்தவர்களின் தவறா என்பது குறித்து விசாரிக்கப்படும். யார் தவறு செய்திருந்தாலும், பாரபட்சமின்றி, நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் இத்தகைய அசம்பாவிதம் நடக்காத வகையில், அனைத்து பூங்காக்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Comments