2005ஆம் ஆண்டில் எஸ்பிஎம் படிப்பை முடித்த ருத்ரகணேஷ் த/பெ. ரெங்கேஸ்வரன் (வயது 35) ஒரு நிறுவனத்தில் சாதாரண வேலையில் அமர்ந்தார். நீர்க்குழாய்களைப் பொருத்துவது, பழுதுபார்ப்பதுதான் அவரது வேலையாக இருந்தது.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் அந்தத் தொழிலில் அவர் ஈடுபட்டிருந்தார். முன்னேற்றத்திற்கான எவ்வித அறிகுறியும் அவருக்குத் தென்படவில்லை. திறன் பயிற்சி சான்றிதழ் இல்லாததால் துணிந்து சம்பள உயர்வும் கேட்க முடியவில்லை. அனுபவம் மட்டுமே அவருக்கு இருந்தது.
இந்நிலையில் தன்னுடைய தந்தை ரெங்கேஸ்வரன் சாத்தையா CIDB நிறுவனத்தில் பணியில் சேருமாறு தமக்கு ஆலோசனை கூறினார் என்று ருத்ர கணேஷ் தெரிவித்தார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதற்கு ஏற்ப CIDB நிறுவனத்தில் பணியில் சேர்ந்த நாள் முதல் தன்னுடைய வாழ்க்கையில் புதிய உருமாற்றத்தை காணத்தொடங்கியதாக அவர் சொன்னார்.
2005 முதல் 2008ஆம் ஆண்டு வரை அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த அவர், 2009ஆம் ஆண்டு CIDB நிறுவனத்தின் தொழில்திறன் பயிற்சி நிறுவனமான Akademi Binaan Malaysia (ABM) இளைஞர் திட்டத்தில் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டார்.
நீர்க்குழாய்களைப் பொருத்துவது, பழுதுபார்ப்பது, சானிட்டரி துறைகளில் முதல்கட்டப் பயிற்சியை தாம் பெற்றதாகக் கூறினார். இங்கு தாம் நான்கு கட்டப் பயிற்சிகளை முடித்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
2009 அக்டோபர் 29,30 ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற 18ஆவது மலேசிய திறன் போட்டியில் நீர்க்குழாய் பொருத்தும் பிரிவில் கலந்துகொண்ட தான் 2ஆவது நிலையில் வெற்றி பெற்றதாகவும் சொன்னார்.
ABM இளைஞர் பயிற்சித்திட்டம் மிகப் பெரிய ஒரு மாற்றத்தை எனக்குக் கொண்டு வந்தது. நீர்க்குழாய் பழுதுபார்ப்பு, பொருத்தும் துறையில் கிடைத்த சான்றிதழ் தன்னை ஒரு முதலாளியாக உருவாக்கியது என்று ருத்ரகணேஷ் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்.
2009ஆம் ஆண்டு ABM மத்திய பிராந்திய இளைஞர் திட்டத்தில் பங்கேற்றேன். இங்கு பயிற்சியை முடித்ததும் சொந்த நிறுவனத்தை அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். சிறு சிறு அளவிலான தொழில்களில் ஈடுபட்டேன். நீர்க்குழாய்களைப் பழுதுபார்ப்பது, புதிதாகப் பொருத்துவது போன்ற பணிகள் புதிய நம்பிக்கையைத் தந்தன.