Offline
ஹைதியில் ஆயுதமேந்திய கும்பல் அட்டூழியம்: 6,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறிய அவலம்
News
Published on 10/09/2024

செயின்ட்- மார்க் : ஹைதியில், போன்ட் சோண்டே என்ற நகரில், ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில், 70 பேர் கொல்லப்பட்ட நிலையில், அந்நகரில் இருந்து, 6,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

கரீபியன் தீவு நாடான ஹைதியில், அந்நாட்டு அதிபராக இருந்த ஜொவனெல் மோய்ஸ், 2021ல் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, பிரதமராக ஏரியல் ஹென்றி பதவி வகித்தார். இவர் ராஜினாமா செய்ததை அடுத்து, செயல் பிரதமராக கேரி கோனில் செயல்பட்டு வருகிறார்.

இந்த ஆட்சிக்கு எதிராக, கேங் லீடர் ஜிம்மி பார்ப்பெக்கியூ செரிஸியர் தலைமையிலான குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் மீதும், அரசுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீதும் அவர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஹைதியின் ஆர்டிபோனைட் பிராந்தியத்தில் உள்ள போன்ட் சோண்டே என்ற நகரில், ஆயுதமேந்திய நபர்கள் சமீபத்தில் கொடூர தாக்குதல் நடத்தினர். வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்த அவர்கள், அங்கிருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோரை கடுமையாக தாக்கினர்.

மேலும், வீடுகள், வாகனங்களுக்கு அவர்கள் தீ வைத்து எரித்தனர். இந்த தாக்குதலில், பெண்கள், குழந்தைகள், பச்சிளங் குழந்தைகள் என, மொத்தம் 70 பேர் உயிரிழந்தனர். நுாற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

நாட்டின் பெரும்பாலான உணவு தேவையை, ஆர்டிபோனைட் பிராந்தியம் பூர்த்தி செய்கிறது. சமீப காலமாக அப்பிராந்தியத்தில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த தாக்குதலை அடுத்து, போன்ட் சோண்டே நகரில் இருந்து, 6,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். அந்த நகரமே காலியாக கிடக்கிறது. ைஹதியின் பல பகுதிகளில் உணவு பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. இந்த தகவலை, ஐ.நா., இடம்பெயர்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. போன்ட் சோண்டே நகரம் முழுதும் ஆயுதமேந்திய கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய நபர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்.

Comments