நவீனத் தொழில்நுட்பத்துடன் மிளிரும் Denza D9 சொகுசு கார் சிங்கப்பூர்ச் சந்தையில் அறிமுகம் கண்டுள்ளது.
ஹாங்காங், கம்போடியா ஆகிய நாடுகளில் அதன் சொகுசு கார்களை அறிமுகப்படுத்திய ‘BYD நிறுவனம், ‘Denza D9 MPV’ ரக ஆடம்பர மின்கார்களை நேற்று (அக்.10) சிங்கப்பூரில் களம் இறக்கியுள்ளது.
‘D9 Elite, ‘D9 Grandeur’ என இரண்டு மாறுபட்ட வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளது சொகுசு கார் ‘Denza’. வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணத்தையும் சேர்த்து இந்த சொகுசு கார்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
‘D9 Elite’ காரின் விலை $296,888 என்றும் ‘D9 Grandeur’ காரின் விலை $341,888 என்றும் கூறிய தயாரிப்பு நிறுவனம், இதுவரை இந்த வாகனத்தை வாங்குவதற்காக ஏறக்குறைய 300 பேர் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தது.
பிரம்மாண்ட வெளிப்புறத் தோற்றம், அதிநவீன தொழில்நுட்பம் இழையோடும் உள்கட்டமைப்பு, ஏழு பேர் வசதியாக அமரும் வகையில் மூன்று வரிசைகளில் கச்சிதமான இருக்கைகள், பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும் இலகு மேசைகள் என வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் பல்வேறு அம்சங்கள் Denza கார்களில் உள்ளன.
அதிகப் பொருள்களை எடுத்துச்செல்வதற்கு கூடுதல் இடங்கள், 6.9 வினாடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் செயல்திறன் ஆகியவை இவ்வகை ஆடம்பர கார்களின் முக்கிய அம்சங்கள் என்று விவரித்தார் ‘BYD’ சிங்கப்பூர் மற்றும் பிலிப்பீன்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குநர் ஜேம்ஸ் இங்.
பயணங்களில் சொகுசு, பாதுகாப்பு, திறன் போன்றவற்றை நாடுவோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் டென்ஸா ஆடம்பர சொகுசு கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட ஜேம்ஸ், வரும் நாள்களில் இவை விற்பனைச் சந்தையில் முதலிடம் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்த 12 மாதங்களில் டென்ஸா கார்கள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் அறிமுகம் காணவிருக்கின்றன.