Offline
டிரம்பை 3வது முறையாக கொல்ல முயற்சி; பேரணிக்கு துப்பாக்கியுடன் வந்த நபர் கைது!
News
Published on 10/16/2024

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கிகளுடன் வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவ., 5ம் தேதி நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுகிறார். அதிபர் தேர்தல் வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்ட முதலில் இருந்து அவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது. முதல்முறையாக, பென்சில்வேனியாவில் கடந்த ஜூலை 13ல் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்றபோது, டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது காதில் காயம் ஏற்பட்டது.

2வது முறையாக, செப்டம்பர் மாதம் புளோரிடா மாகாணம் வெஸ்ட் பாம் பீச் பகுதியில் உள்ள தன் கோல்ப் கிளப்பில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வளாகத்தின் சுற்றுச்சுவர் அருகே, டிரம்பை குறிவைத்து துப்பாக்கியால் ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார். ரகசிய போலீசார் கவனித்து ஹவாயைச் சேர்ந்த ரயான் வெஸ்லே ரோத், 58, என்ற அந்த நபரை கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று(அக்.,14) 3வது முறையாக, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை கொல்ல முயற்சி நடந்துள்ளது. அமெரிக்கா, கோசெல்லாவில் நடந்த கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்ற நிலையில், அங்கு போலி பாஸ் மற்றும் துப்பாக்கியுடன் வந்த நபரை போலீசார் கைது செய்தனர். 49 வயதான, வெம் மில்லர் என அடையாளம் காணப்பட்டார். அந்த நபரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments