மும்பை:சாலையில் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி செல்லும்போது சில சமயம் ஒன்றுடன் ஒன்று உரசுவதும், நெரிசல் மிகுந்த நேரங்களில் பிரேக் பிடிக்காமல் இடிப்பதும் வழக்கமான நிகழ்வுதான். இதுபோன்ற சூழ்நிலையில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம். சில சமயங்களில் அடிதடியும் ஏற்படுவதுண்டு.
இவ்வாறு சாலையில் ஏற்பட்ட லேசான விபத்தைத் தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில் ஒரு வாலிபர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலம் மும்பையின் மலாட் பகுதியில் கடந்த 12-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆகாஷ் மைனே என்ற வாலிபர் தனது பெற்றோருடன் காரில் சென்றுள்ளார். டிண்டோஷி பகுதியில் சென்றபோது ஒரு ஆட்டோவை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது கார், ஆட்டோ மீது லேசாக இடித்துள்ளது. இதனால் ஆட்டோ டிரைவருக்கும் ஆகாஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆட்டோ டிரைவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆகாஷை சரமாரியாக தாக்கினர்.
கீழே விழுந்த ஆகாஷின் மீது அடி விழாமல் இருப்பதற்காக அவரது தாய், பாதுகாப்பு கவசம் போன்று அவர் மீது படுத்துக்கொண்டு அடி மிதியை வாங்கினார். தன் மகனை அடிக்க வேண்டாம் என தந்தையும் கெஞ்சினார். அப்போதும் ஈவு இரக்கம் காட்டாத அந்த நபர்கள், ஆத்திரம் தீரும் வரை ஆகாஷை கால்களால் மிதித்தனர். இந்த கொலை வெறி தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.போலீஸார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்துள்ளனர். ஆட்டோ டிரைவர் மற்றும் மூன்று பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.