இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பெய்யும் கனமழையால் கோலாலம்பூர், சிலாங்கூரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.
வெள்ளப் பெருக்கின் காரணமாக தாமான் மெலாவாத்தி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக பெஞ்சானா 2024 வலைத்தளம் தகவல் வெளியிட்டது. நாடாளுமன்றச் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மோசமான வெள்ளம் சூழ்ந்தது. புக்கிட் அமான், ஜாலான் டூத்தா, ஜாலான் சுல்தான் அப்துல் ஹலிம் , மலாயா பல்கலைக்கழகத்தை நோக்கிச் செல்லும் பார்லிமன் சாலை வெள்ளத்தில் மிதந்தது,
துன் ரசாக் சாலையிலிருந்து விஸ்மா பெர்னாமா செல்லும் சாலையில் வெள்ளம் கரைபுரண்டோடியது. பூனுஸ் ஆற்றின் நீர் மட்டமும் அபாய கட்டத்திற்கு உயர்ந்தது.
ஸ்மார்ட் சுரங்க வழியும் மோசமான வெள்ளத்தின் காரணமாக போக்குவரத்திற்கு முற்றாக மூடப்பட்டது. அந்தப் பாதையை வழக்கமாகப் பயன்படுத்தும் வாகன மோட்டிகள் மாற்றுவழிகளை எச்சரிக்கையாகப் பயன்படுத்துமாறு X தளம் தகவல் வெளியிட்டது.
வெள்ளத்தின் காரணமாக நாடாளுமன்ற மக்களவையும் 30 நிமிடம் தாமதமாக தொடங்கியது. மக்களவை உறுப்பினர்கள் பலரும் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் ஏற்பட்ட வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டதால் உரிய நேரத்திற்கு அவையில் கலந்து கொள்ள முடியாமற் போனது. அதன் காரணமாக அரை மணி நேரம் தாமதமாக மக்களவை தொடங்கப்பட்டதாக மக்களவை தலைவர் டான்ஸ்ரீ ஜொகாரி அப்துல் தெரிவித்தார்.