Offline
டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 94 பேர் பலி; நைஜீரியாவில் மீண்டும் சோகம்
News
Published on 10/17/2024

ஜிகாவா:

நைஜீரியாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 94 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் இருக்கும் ஜிகாவா மாகாணத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால், டேங்கர் லாரியில் இருந்த எரிபொருள் வெளியே கசிந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், சாலையில் கசிந்த எரிபொருளை போட்டி போட்டுக் கொண்டு அள்ளினர்.

அப்போது, எதிர்பாராத விதமாக, அந்த டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இதில், 94 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நைஜீரியாவில் கடந்த மாதம் இதே போல, டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில், 48 பேர் உயிரிழந்திருந்தனர்.

கடந்த 2020ம் ஆண்டு முதல் 1,531 பெட்ரோல் டேங்கர் லாரிகள் விபத்துக்குள்ளானதில் 535 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,142 பேர் காயமடைந்து விட்டதாக நைஜீரியாவின் சாலை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் சரக்குகளை எடுத்துச் செல்ல போதிய ரயில் போக்குவரத்து இல்லாத காரணத்தால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும், ஆப்ரிக்காவிலேயே நைஜீரியாவில்தான் அதிக விபத்துக்கள் நிகழ்வது புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

 

Comments