கோலாலம்பூர்:
இலங்கையில் இணைய நிதிமோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 10 வெளிநாட்டினரை அந்நாட்டுப் போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை(அக்.15) கைது செய்துள்ளனர்.
புத்தளம் மாவட்டதிலுள்ள சிலாபம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, இணைய அடிப்படையிலான நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 மலேசிய ஆண்கள், 3 எத்தியோப்பிய ஆண்கள் மற்றும் ஒரு பெண், ஒரு கென்யா பெண் மற்றும் ஒரு சீன ஆடவர் அடங்குவதாக புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
போலீசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக நேற்று புதன்கிழமை அவர்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையின் போது, 20 கணினிகள், மூன்று ரவுட்டர்கள் மற்றும் 282 மொபைல் போன்கள் உட்பட குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மின்சார உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
குறித்த குற்றச்செயல் தொடர்பில் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.