கோலாலம்பூர்:
பினாங்கில் உள்ள செபெராங் ஜெயா மருத்துவமனையில் மருத்துவ பயிற்சியாளராக பணியாற்றியபோது. பகடிவதைக்குள்ளாகிய ஒரு பயிற்சி மருத்துவர் உயிரிழந்தது தொடர்பான மற்றொரு வழக்கை சுகாதார அமைச்சகம் தற்போது விசாரித்து வருவதாக அதன் அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சூல்கிப்ளி அமாட் தெரிவித்துள்ளார்.
இன்று நடந்த நாடாளுமன்ற அமர்வில் இந்த விஷயத்தை வெளிப்படுத்திய சுகாதார அமைச்சர், இந்த வழக்கு தொடர்பான தகவல் கிடைத்ததும் உள்ளக விசாரணைகளை அமைச்சகம் உடனடியாக தொடங்கியது என்றார்.
டத்தோ டாக்டர் அமாட் யூனுஸ் ஹைரியின் (PN-குவாலா லங்காட்) கேள்விக்கு இவ்வாறு பதிலளித்த அவர், மேலும் இவ்வழக்கு தொடர்பான நடவடிக்கைக்கு முன்னதாக அதனை முழுமையாக விசாரிக்க ஒரு சுயாதீன குழுவை தமது அமைச்சு அமைக்கும் என்றார்.
எனினும் மருத்துவர்கள் பகடிவதைக்கு இலக்காகும் வழக்குகளைத் தடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கத் தாமதமாகிறது என்று சில தரப்பினர் கூறுவதை நான் அறிவேன்.ஆனால் சுகாதார அமைச்சு இதுபோன்ற விவகாரங்களில் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.