Offline
கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் இந்திய ஆடவர் மரணம்; மற்றொருவர் காயம்
Published on 10/21/2024 01:22
News

கோலாலம்பூர்:

பந்தாய் பாரு நெடுஞ்சாலையின் (NPE) 14.9 ஆவது கிலோமீட்டரில், பந்தாய் தளம் நோக்கிச் சென்ற கார் ஒன்று இன்று காலை விபத்தில் சிக்கி, தீப்பிடித்ததில் இந்திய ஆடவர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒருவர் லேசான காயமடைந்தார்.

இன்று காலை 8.28 மணிக்கு இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு தகவல் கிடைத்தது என்று, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கோலாலம்பூர் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

உடனே செபூத்தே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து இரண்டு இயந்திரங்களுடன் மொத்தம் ஒன்பது உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.

அவர்கள் அந்த இடத்திற்கு வந்தவுடன், விபத்துக்குள்ளான டொயோட்டா வியோஸ் தீப்பிடித்தது, ”என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், லேசான காயமடைந்த ஆடவர் சிகிச்சை பெற மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு (PPUM) அனுப்பப்பட்டார்.

“தீ விபத்தினால் வாகனம் முற்றாக எரிந்து நாசமானது என்றும், காலை 9.40 மணியளவில் மீட்பு நடவடிக்கை முடிவடைந்தது,” என்றும் அவர் மேலும் கூறினார்.

Comments