கோலாலம்பூர்: 2027 ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான மதிப்பிடப்பட்ட 700 மில்லியன் ரிங்கிட் செலவானது, அரசு மற்றும் தனியார் துறைக்கு இடையே கூட்டாகப் பகிரப்படும் என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோஹ், சரவாக் மாநில அரசாங்கம் இதற்காக 365 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. பினாங்கு அரசாங்கம் 15 மில்லியன் ரிங்கிட்டை வழங்கவிருக்கிறது.
சபா மாநில அரசாங்கம் முதலில் சீ விளையாட்டிற்காக 100,528,975 ரிங்கிட்டை ஒதுக்க ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் வசதிகள் இல்லாததால் பின்வாங்கியதாகவும் யோஹ் மேலும் கூறினார். செவ்வாய்க்கிழமை (அக் 22) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பணம் மற்றும் பொருள் அடிப்படையில் உதவிகளை பெறுவதற்கு தனியார் துறைகள் மற்றும் பெரு நிறுவன அமைப்புகளுடன் அமைச்சகம் மேலும் விவாதங்களை மேற்கொள்ளும்.
மலேசியாவில் நடைபெறவிருக்கும் சீ விளையாட்டு மற்றும் பாரா ஆசியான் 2027 விளையாட்டுப் போட்டிகளை விவேகமாகவும், குறைந்தபட்சமாகவும், சிறிய அளவிலும் நடத்தலாம் என்றும் அமைச்சகம் கருதுவதாக யோஹ் கூறினார். மலேசியாவின் ஒலிம்பிக் கவுன்சில், மலேசியாவின் பாராலிம்பிக் கவுன்சில் மற்றும் தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களுடன் கலந்துரையாடல் மூலம் ஒரு ஏற்பாட்டுக் குழு மற்றும் சீ விளையாட்டு 2027 செயலகத்தை உருவாக்கும் பணியில் அமைச்சகம் உள்ளது என்று அவர் கூறினார். சீ விளையாட்டு போட்டி 2027 ஏற்பாடுகள் பற்றி சௌ கோன் இயோவின் (PH-Batu Kawan) கேள்விக்கு யோஹ்பதிலளித்தார்.