பெங்களூரு:கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் வசித்து வந்தவர் வினய் குண்டகாவி(வயது 38). இவர் டாக்டர் ஆவார். இவர் உப்பள்ளியில் சொந்தமாக ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். அவருடைய மனைவியும் டாக்டர் ஆவார்.
வினயின் தந்தை வீரபத்ரய்யா. இவரும் டாக்டர். இவர் ஹாவேரி என்ற இடத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அங்கேயே சொந்தமாக ஒரு ஆஸ்பத்திரி நடத்தி வந்தார்.
இந்த நிலையில் வினய்க்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலையில் திடீரென வினய் மயக்கம்போட்டு விழுந்தார். இதனால் பதற்றம் அடைந்த அவருடைய மனைவி, வினயை பரிசோதனை செய்தார். அப்போது அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
அவரும், அவரது பிள்ளைகளும் கதறி அழுதனர். வினய் இறந்துவிட்ட தகவல் அவருடைய தந்தை வீரபத்ரய்யாவுக்கு தெரிவிக்கப்பட்டது. மகன் மீது மிகுந்த பாசம் கொண்ட வீரபத்ரய்யா, மகன் இறந்த செய்தி கேட்டதும் பதற்றம் அடைந்தார்.
சிறிது நேரத்தில் துக்கம் தாங்காமல் கதறி அழுதார். மயங்கி கீழே விழுந்தார். அவரை, ஆஸ்பத்திரியில் இருந்த சக டாக்டர்கள் மீட்டு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகன் இறந்த செய்தி கேட்ட வீரபத்ரய்யா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஒரேநாளில் மகனும், தந்தையும் இறந்த சம்பவம் அவர்களது குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.