தன்னுடைய எல்லைகளையும் வளங்களையும் பாதுகாப்பதற்கு ஒரு கூட்டாட்சி முறையே சிறந்தது என்று மூத்த தலைவர்கள் துன் டாக்டர் மகாதீர் முகமது, தெங்கு ரஸாலி ஹம்ஸா ஆகிய இருவரும் கருத்துரைத்தனர்.
சட்டப்பூர்வமான தொகுதிகளில் கட்டிக் காக்கப்படும் ஒற்றுமையே மலேசியாவின் உண்மையான பலமாக இருக்கிறது. இந்த ஒற்றுமையே மலேசியாவின் ஆணிவேராக இருக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
கூட்டரசு மாநிலங்களுக்கு வலிமை தருகிறது. ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனி மாநிலமாக மிகுந்த வலிமையுடன் செயல்பட முடியாது. இதனால் தான் பல மாநிலங்களை ஒன்றாக இணைத்து ஒரு கூட்டரசை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கூறினார்.
தங்களுடைய காலனித்துவ எல்லைகளில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக பிரிட்டிஷ் ராஜியத்தின் முக்கிய கவலையாக புதிதாக சுதந்திரம் பெற்ற மாநிலங்களின் நீண்ட கால பாதுகாப்பு விவகாரம் இருந்தது என்று முதல் நான்கு பிரதமர்களின் கீழ் அரசாங்கத்தில் பணியாற்றிய அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரஸாலி சொன்னார்.
இதன் காரணமாகத்தான் அவர்கள் தனித் தனி மாநிலங்களை ஒன்றிணைத்து மலேசிய கூட்டரசை அமைத்தனர். ஏற்கெனவே கம்யூனிஸ்டு மிரட்டலுக்குட் பட்டிருந்த சரவாக்கில் இருந்து பிரிட்டிஷ் வெளியேறியது. சிங்கப்பூர் கம்யூனிஸ்டு மிரட்டலை எதிர்நோக்கியிருந்தது.
இந்த மாநிலங்களை ஒன்றாக இணைப்பதற்கு நாங்களும் பிரிட்டிஷ் ராஜியமும் ஏன் ஒப்புக் கொண்டோம் என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
பிலிப்பைன்ஸை. சேர்ந்த மக்காபகல் சபா மீது உரிமை கொண்டாடினார். இந்தோனேசியாவின் சுக்கார்னோ மலேசியாவை நொறுக்குவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார் என்று கூ லி என்று அழைக்கப்படும் தெங்கு ரஸாலி கூறினார்.