கோலாலம்பூர்:
அனைத்துலக சுற்றுலாத் தளமாக விளங்கும் மலாக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட ஸ்கூட் விமானச் சேவை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சிங்கப்பூரிலிருந்து 112 பயணிகளுடன் கடந்த புதன்கிழமை (அக்டோபர் 23) பிற்பகல் பத்து பிரண்டாமில் இருக்கும் மலாக்கா அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த ஸ்கூட் விமானத்திற்கான வரவேற்பு விழாவில் அம்மாநில சுற்றுலா, பாரம்பரிய, கலை, கலாசார குழுக்கான தலைவர் அப்துல் ரசாக் அப்துல் ரஹ்மான் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக சுற்றுலா தினம் 2025, உலக சுற்றுலா மாநாடு 2025 போன்ற மலாக்காவின் அனைத்துலக சுற்றுலா நிகழ்ச்சிகளை ஆதரிப்பதில் இந்தப் புதிய விமானச் சேவை முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறினார்.
சிங்கப்பூருக்கும் மலாக்காவிற்கும் இடையிலான ஸ்கூட் விமானச் சேவை திங்கள், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில் வாரத்திற்கு ஐந்து முறை இயக்கப்படும் என்றார் அவர்.
குறிப்பிட்ட நாட்களில் இரவு நேரங்களிலும் விமானங்களை இயக்க ஸ்கூட் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.